நாம் எல்லோருமே சின்ன வயசில் விளையாடிய பொருட்களை தொலைத்தாலும் அந்த ஞாபகங்களை தொலைப்பதில்லை.
காரணம் சிறு வயது ஞாபகங்களுக்கு இணையில்லை என்பதை நம் சுமை மிகுந்த வாழ்வு சுட்டி நிற்பதே.
எத்தனை வயதானாலும் நம் அன்புக்குரியவர்களின் அதை சொல்லி சொல்லி பூரித்து போகும் செயல் இந்த உலகில் யாரையும் விட்டு வைப்பதில்லை.
அப்படியிருக்க ஏதாவது வித்தியாசமான குறும்பு படங்களோ,ஞாபக சின்னங்களோ கையில் கிடைத்து விட்டால் போதும் .அதை வைத்து அந்த வயசுக்கே போய் விடுவது மனித இயல்பு.
நம்மை சார்ந்தவர்களுக்கு அதை காண்பித்து கதை பேசியே மாய்வோம். பாவம்தான் அவர்கள் அதற்காக விட முடியாது.நம் சந்தோசத்தை திணித்தே திணறடிப்போம்.
அந்த வகையில் நம் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த நல்ல ஞாபக சின்னங்களை கொடுப்பது மிகவும் நல்லதும் மகிழ்விக்கக்கூடியதும்.நம்மை பெருமைப்படுத்தக்கூடிய ஒன்றும் ஆகும்.
அதில் ஒன்றுதான் குழந்தைகளில் கால் பதிவு,கை பதிவு போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்தி அவர்கள் வளந்ததும் கொடுப்பது.
இதற்கென கிராவ்ட் கடைகளில் ஒரு விதமான கிளே விக்கும் அதை வாங்கி கூட செய்யலாம்.
முடியாவிட்டால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் கிராவ்ட் பெயிண்ட் ல் அடையாளம் எடுத்து பதிவு செய்து திகதி ஆண்டு குறிப்பிட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.
கூடவே நம்முடையை கை ,பாத அடையாளங்களுக்கு பக்கத்தில் அவர்களுடைய பிஞ்சு கை,பாத அடையாளங்களை வைக்கும்போது மிகவும் அழகாக இருக்கும்.
மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றில்லை.இது என் முயற்சிகள் . நீங்களும் குழந்தைகளின் ஒத்துழைப்புடன் செய்து பாருங்கள்.
2. அடுத்து அவர்கள் முதல் முதல் பாவித்த பொருட்களை இங்கு படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்து வைக்கலாம்
நான் கடிதமும் கவிதையும் எழுதி இதற்குள் ஒளித்தும் வைத்திருக்கிறேன்.
என் காலத்தின் பின் அவர்களுக்கு விட்டுச்செல்ல நினைக்கிறேன்.
என் அன்பு, சந்தோஷம் ,புத்திமதி, கண்ணீர், வீரம் எல்லாவற்றையும் கலந்தே இதைசெய்து வைத்திருக்கிறேன்
அவர்களுக்காக பொருளும் பணமும் சேர்த்துக்கொடுத்தாலும் அது எப்போதும் பொதுவானதும் அடையக்கூடியதும் அவர்களும் தேடிக்கொள்வார்கள்.
ஆனால் இவ்வாறான சில சிறுவயது ஞாபகங்கள் அவர்களுக்காக பெற்றோர் நம்மால் மட்டுமே பதிவு செய்து கொடுக்க முடியும்.