ஈழத்தில்
நான் பிறந்த ஊரில் பொங்கல் மிக அழகாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.சமையல் என்றால் அம்மாக்கள் என்றுதான் பார்த்திருப்பீர்கள் ஆனால் எங்கள் ஊரில் பொங்கல் என்றால்
அப்பாக்கள் அண்ணன்கள்தான் பொங்கலுக்கு மெயின் காரக்டர்களாக விளங்குவார்கள்.ஆனால் அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ஓடி ஓடி அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேணும்.
கோலம் தமிழகத்திலும் இலங்கையின் சில மாகாணங்களிலும் வழக்கத்தில் இருந்தாலும் நாம் வசிக்கும் மாவட்டத்தில் மிக அரிது.ஆனால் பொங்கலுக்கு கோலம் போடுவோம்.அதுவும் ஆண்கள்தான்.உடனே பெரிய பெரிய வண்ணக்கோலங்களை
எல்லாம் நீங்கள் கற்பனை பண்ணினால் நான் பொறுப்பல்ல .
ஒரு பெரிய சதுர கோடு.அதையும் போட தெரியாது உலக்கை வைத்து தான் நேர் கோடு போடுவார்கள்.அந்த சதுரத்தில் ஒரு மூலையில் ஒண்ணாம் வாப்பு குழந்தைபோல சூரியன் வரைந்து வைப்பார்கள்.
அதன் நட்ட நடுவில் பொங்கல் வைப்பார்கள்.
மற்றும்படி எல்லாமே மாவிலை தோரணம் என சிறப்பாகவே இருக்கும்.நம்மூரில் பொங்கல் கொண்டாட யாரும் சமயம் பார்க்க மாட்டார்கள்.எல்லோரும் பொங்குவார்கள்.ஆனாலும் குடும்பத்தில் ஏதாவது இழப்போ ஏதாவது அசம்பாவிதங்களோ நடந்தால்
மட்டும் அந்த வருடம் பொங்க மாட்டார்கள்.
பொங்காத வீட்டுக்கு எல்லோரும் பாத்திரம் நிறைய நிறைய குடுப்பார்கள்.
பொங்கினவனை விட தண்டினவனுக்குதான் பொங்கல் அதிகம் கிடைக்கும் என்று அம்மம்மா சொல்லும் பழமொழியை போல பொங்காவிட்டால் நிறைய பொங்கல் கிடைக்கும்.
அப்போதெல்லாம் நெற்கதிர்களை உரசிவிட்டு வந்த சுத்தமான காற்று எங்களை தொட்டுச்சென்றது.சொந்தங்களின் குரலை கேட்க போன் தேவைப்படவில்லை . யார் வீட்டு கதவுகளும் எங்கள் வரவிற்கு எதிராக தாள் போடவில்லை.
.கூடும் இடம் ,நலம் விசாரிக்கும் சந்திப்புக்கள் ,புன்னகை பரிமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் வாட்ஸ் அப் , வைபர் ,ஸ்கைப்,மெசஞ்சர் எதையும் நாங்கள் நம்பி இருக்கவில்லை.மழைத்துளிகளை படம் பிடித்து பேஸ்புக் ல் பதிவேற்றும்
வேலை இருக்கவில்லை. எந்த அழகையும் ஸ்டேட்டஸ் ஆக ஏற்றம் செய்யும் கண்களூடு பார்க்கவில்லை.வரப்புகளில் வழுக்காமல் வரிசையாக நாம் நடந்த சுகத்தை வெளிப்படுத்த எந்த வரிகளையும் தேடியதில்லை.
கடை,தெருகள்,கோவில்கள் விழாக்கள் எல்லாமே எங்களை இணைப்பில் அணைத்து வைத்திருந்தது.அழகான நாட்கள் அவை.
கனடாவில் என் பொங்கல் .
முதலில் ஆளுக்கொரு நாள் சொல்லுவார்கள் இலங்கை நேரப்படி சிலர் பொங்குவார்கள் அவ்வாறாயின் முதல் நாள் வரும். சிலர் பொருத்தமாக மாட்டுப்பொங்கலை அதுவே சரியான நாள் என்று கொண்டாடுவார்கள்
இன்று பொங்கல் .அதிகாலையில் எழுந்தேன்.{மிகப்பெரிய அதிசயம்.)
ரைஸ் குக்கரை எடுத்து அரிசிகழுவி , வறுத்த பயறு எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து மூடினேன்.சிறிது நேரத்தில் திறந்து வறுத்த ஏலக்காய் ,கயூ,பிளம்ஸ் சேர்த்து கரைத்த பனங்கட்டி சேர்த்து திறந்தே வைத்திருந்தேன்.
பால் பொங்கும் பச்சைத்தண்ணி எப்பிடி பொங்கும்???????
ம்ம் வெந்த பின் பால் சேர்த்து கிளறி மூடி விட்டேன் அவ்வளவேதான்.
மொத்தத்தில் பொங்கி ஊத்தி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் பின்ன ஆரு ரைஸ் குக்கர் ,கிச்சன் எல்லாம் கிளீன் பண்றதாம்.
முதல் முதலாக, மேசையில் பேப்பரை ஒட்டி மகளிடம் திருடிய கலர்களை கொண்டு கோலம் வரைந்தேன்.
7.48 க்கு சூரியன் வருவார் என வெதர் சானல் ல் இருந்தது .
ஆனால் ரெம்ப குளிரில் அமுங்கி தலையை காட்டாமலே பதுங்கி இருந்தார். ஏதோ எனக்கு தெரிந்தபடி படைத்து வணங்கி விட்டு வழமையான பிஸி க்கு திரும்பி விட்டேன்.
ஒரே பொங்கல் ஈ கார்ட் ஆ வந்திருக்கு மெசேஜ் ல் .பயபுள்ளைகளுக்கு எத்தனை தடவை அட்ரஸ் க்கு மெய்யான கார்ட் அனுப்ப சொன்னாலும் ஈகார்ட் ஆ அனுப்பி வைக்கிறது என்னைப்போலவே சோம்பேறிகள்.
அவ்வளவுதான் அவசரமான நாட்கள் இவை.
நன்றி .
சுரேஜினி பாலகுமாரன்.