Showing posts with label இதயம் பேசுகிறது கவிதை வரிகள். Show all posts
Showing posts with label இதயம் பேசுகிறது கவிதை வரிகள். Show all posts

Monday 23 January 2017

எண்ணம்

எண்ணம்

தொலைக்க நினைக்கிறேன்
தூய்மையற்ற நினைவுகளை
மறக்க நினைக்கிறேன்
மனதின் சுமைகளை
என்னுள்
பதிக்க நினைக்கிறேன்
நிறைவேறும் கனவுகளை


நினைவு



இழந்ததை எல்லாம்
இறைவன்
திருப்பி தந்தால்
இன்னுமொரு
புதிய வாழ்வு
பிறரில் சலிக்காமல்
வாழ்ந்து விடுவேன்.




உன்னை எண்ணி



உன்னால் நான்
படுகுழிக்குள்
விழுத்தப்பட்ட பின்னும்
எம்பி எம்பி
உன்னையே எதிர்பார்க்கிறேன்.


இல்லை



சோகத்தின் இறுக்கத்தில் - வந்த
தேகத்தின் சோர்வில் - எழுந்த
சேதத்தின் விளைவில் - எஞ்சிய
என் மதிக்கு செயலில்லை - என்
நின்மதிக்கு பொருளில்லை
தலைவிதிக்கு எழிலில்லை

காதலே



என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது
வலிக்க -என்
கனவிலும் வந்து
உறுத்தாதே.
என்னோடு நிலைக்க
மறுத்த -உன்
தடங்களை அழிக்கவிடு

ஏக்கம்



விரித்த சிறகு
வலிப்பதெதற்கு -என்
தேசமின்று
தூரமாகிப்போனதா?


சந்திரிகா அம்மைக்கு

1998

எண்ணி எண்ணி எத்தனையோ நாட்களாக
எனக்குள்ளே புதைந்தபடி செல்லாத ஆசையொன்று
எழுதிட வேண்டும் உனக்கொரு கடிதமதில்
என்னின மக்களின் மனக்குமுறல்களை

நலமென்று நாம் கூற முடியுமா - எம்
நிலையின்று நீ உணர்ந்திடக்கூடுமா?
நினைத்துப்பார் மனித உணர்வுகளுடன் ஒருகணம்
நித்தமும் நிகழ்த்தும் பலிகளையும் அதன் வலிகளையும்

அன்றொருநாள் என் கண்முன்னே கொன்றார்கள்
அன்னையொடு தந்தையையும் எனக்கண்ணீருடன் கூறிடும்
ஆதரவின்றிய குழந்தைகள் எண்ணிக்கை தொடர்கதையிங்கு - உன்
அடக்குமுறைகளுக்கு பிஞ்சுக்குழந்தைகளுமா அழுது துடிக்க வேண்டும்?

துடிப்புடனே பள்ளி சென்று கனவுடனே படித்துவரும்
துள்ளும் இளவயது பிள்ளைகளின் வாழ்வினிலே
துன்பங்கள் பல இழைத்து சோர்ந்திடச்செய்து-எதற்கு
எதற்கு துருப்பிடிக்க வைக்கிறாய் இவர்கள் எதிர்காலத்தை?

அலைபாயும் கடலில் தமிழன் அடிபதிக்க தடையெதற்கு
அனுமதியில்லையா எம் நிலமதில் குடியிருக்கவும் பயிர்விதைக்கவும்
அநியாய முறையில் எங்கள் உரிமைகள் பறிப்பு
அரசாள்பவர்களே என்று தணியும் எம்மீது உங்கள் கொதிப்பு

எங்கள் பத்திரிகையின் பக்கங்களும் செய்திகளும் இயம்புவது
எங்கெல்லாம் குண்டுவீழ்ந்து எத்தனைபேர் இன்றுபலி
எங்கெங்கு பெண்கள் கிருஷாந்தி ஆனார்கள் என்பவைதான்
என்றிதற்கு முற்றுப்புள்ளி தெரியவில்லை இது எமக்கு

நாட்டை வளம்படுத்த என்று நீ நாடகமிட்டு
நாடு நாடாய் பணம் வேண்டி போடுகிறாய் எம்மில் குண்டு
நம் நாட்டிலேயே அகதியாகி நிலமிழந்து நிலைகுலைந்து
நாளாந்தம் பயத்தோடு பதைப்புடனே வாழுமெமக்கு வழி ஏது?

உலக நாடுகளும் ஊமையாகி போனதால்
உன் பிழைகள் இன்று நியாயம் ஆனதா?
உயிர் பிழைக்க மருந்தில்லை உறங்குகிறது உண்மை
உந்தன் ஆட்சியில் படும்துயர் முடியுமா எழுதி

ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டினால்
ஒவ்வொரு சோகம் குடிகொண்டு இருக்க
ஒன்றும் தெரியாத பாவைபோல் அலரி மாளிகையில் நீ
ஒருமுறையேனும் நிதானித்து இதையிட்டு யோசி

தெரியாத மொழியில் ஆட்சி நடத்தி
திணறடிக்கிறாய் மூச்சு எம்தமிழ் மொழிதனை
தயவுடன் ஒருமுறை தட்டிப்பாருன் மனச்சாட்சியை
தமிழ்த்தலைமுறை ஒருமுறையும் இல்லை உனக்கடிமை

விரைவில் ஒருமுறை வடபகுதிக்கு வருகை தா
வரும்போது மறக்காமல் உன் மகனையும் கூட்டிவா
வியக்காதே எதுக்கென்று செம்மணிக்குள் புதைக்க
விளங்கும் அதன்பின்பு உனக்கந்த வேதனை

எம் இனிய தாசம் ஒருமுறை அமைதியில் சிரிக்க
எம் மனம் எவ்வளவோ ஆசைப்படுகிறது -நீ
ஏவிவிட்டு உன் படைகளை சேதமாக்கியே பார்க்கிறாய் -ஆனால்
எரியும் மனதுடன் உலவுகிறது வேங்கைக்கூட்டம் கவனம்

பயங்கரச்செய்திகள் அபாயக்குரல்கள்
பாலாத்காரம் சாட்சிகள் இல்லாத சாவுகள்
பாதை தெரியாத வாழ்க்கை ஓட்டம் இங்கு
பாவிகளின் வெறியாட்டமோ தாங்கமுடியவில்லை

உன்படைகளின்று மோதுகிறது பச்சிளம்குழந்தைகளுடன்
உண்மையில் வீழ்த்தப்படுவது அப்பாவி மக்கள்
உனக்கெதுக்கிந்த ஆணவம் வென்றுகொண்டிருக்கிறாய் என்றா?
உதிர்கின்ற பூக்களாகி மக்களுக்காக உன் எதிரியாகினர் புலிகள்

வருகின்ற காலமதில் நீ பாடம் படிப்பாய்
விரிகின்ற போரில் நீயதை உணரும் நேரம் அருகில்
விளங்கத்தான் போகிறது உனக்கப்போது
விடுதலை என்பதற்கு விலை என்ன என்று

இத்துடன் நான் முடிக்குமுன்னர்
இடிக்கப்பட்ட கோயிலின் கையுடைந்த கடவுளை
இரக்கத்துடன் வேண்டிக்கொள்வது என்னவெனில்
இக்கடிதம் அனுப்புவதற்கு குன்றுகுழி வீதியினில்

தங்கு தடை தாண்டிநான் போகும் போது
திரும்பி உயிருடன் வரவேண்டும் என மிகுந்த சிரமத்துடன்
திருந்தாத உனக்கு அனுப்புகிறேன் கடிதம்
தயவு செய்து புரிந்து கொள்வாயா?

கண்டிப்பாய் நீயதனைக்கண்டு கொள்ள மாட்டாய்
குப்பையிலே போகுமென்று நிச்சயமாய் தெரியும்
கேலியாகிப்போனதல்ல இக்கடிதம்
கடிதமாகி போனதுதான் எம் வாழ்க்கை
சுரேன் செல்லையா [சுரேஜினிபாலகுமாரன்]

நீ வேண்டும்

நீ வேண்டும்
என் உயிர் வரை வருடிச்சென்ற உன்
ஸ்பரிசம் தொலைத்தவள் நான்
மறுபடி கேட்கிறேன் உன்
மூச்சுக்காற்றில் என் 
கண்கள் மயங்க
நெருங்கி  வா என்று
தூரமெனும் துயரில் சோருகின்ற
மனதில் துடிக்கின்ற உன் நினைவுகள்
போதும் எனை
துடிப்புடன் வாழவைக்க எப்போதும்
இருப்பினும் நீ வேண்டும்

சொத்து


உன்னை உருக்கி
ஊனை சுருக்கி
போலி வாழ்வில் பயனேது
சேர்த்ததெல்லாம் கொண்டுபோக
சவப்பெட்டிக்குள் இடமேது

அம்மா


அம்மா 
என்று உன்னை அணைக்காத உயிரில்லை என்
கருவில்அழிந்த உயிருக்கு
அந்த வாய்ப்பில்லை


Thursday 3 September 2009

இருளின் பிடியில் அலறும் தேசத்தை நோக்கி......






எழில் கொஞ்சும் இயற்கை வளம்
எனை ஈன்றெடுத்த அன்னை நிலம்
விழி காண முடியவில்லை இன்று
விதியை எண்ணி வருந்துகிறேன் நொந்து
பழி வந்து சேர்ந்ததுவோ எனக்கு
பகட்டாக வாழப்பறந்தவன் என்று
களிப்போடு வாழ்வில்லை நான் இங்கு
கனன்று எரிகிறது என் நெஞ்சு
.


பரந்த வானின் நிலவின் ஒளியில்
படுக்க வேண்டும் பாய்விரித்து மரநிழலில்
விடிந்ததென்று சேவல் கூவும் இன்பம்
வித விதமாய் ஒலியெழுப்பும் அலாரமிது துன்பம்
செறிந்த மரங்களூடே வீசும் காற்றை
செத்து மடியுமுன் ஏற்க வேண்டும் என் சுவாசப்பை
விரிந்து செல்கிறது மண்ணில் கால்பதிக்கும் ஆசை
விம்மி அழுகிறேன் கேட்கவில்லை ஓசை
.

பலநாள் ஆசைகள் சுடராய் எரிந்தது
பலனாய் நெடுங்கனவுதான் வந்தது
இதுநாள்வரையில் உறங்கிய ஆசைகள்
இதமாய் நெஞ்சில் உதயம் ஆனது
தலைநகரில் கால்பதித்தேன் புல்லரித்தது உடல்
தமிழ் முகங்களைத்தேடினேன் உடன்
தொலைவில் ஓரிருவர் சிரிப்பைத்தொலைத்த முகம்
தொக்கி நின்றது அதில் பெரும் பயம்.

.

சிறைவாழ் தமிழ்ர்கள் பலபேர் - இங்கு
சிறுகுற்றம் புரியவில்லை விடுதலைதான் என்று?
மறைந்து வாழ்ந்தனர் நம்மக்கள்- இம்
மண்ணில் தமிழ்ராய் பிறந்ததுதான் அவர் குற்றம்
கொலை மலிந்து உயிர்கள் தொலைந்தது
கொடுமையது தலை விரித்து தாண்டவம் ஆடியது
தடை உத்தரவு திடீரெனப் பிறந்தது
தடல்புடல் தேடலோடு கைதுகள் தொடர்ந்தது.
.

சோதனைகள் பலகடந்து நான் சென்றேன் யாழிற்கு
சோலையாக இருந்தமண் கிடந்ததே பாழாக
உறவுகள் கண்டேன் இதுவென்ன உருவோ
உடல்மெலிவு சகிக்கவில்லை ஊனிழந்த நிலையோ
சித்திமகள் சித்திரவதையில் வாழ்விழந்ததேனோ
சிறகொடிந்த பறவைகளாய் வாழுவோர் எத்தனையோ?
நித்தம் இங்கு நடக்கும் நிந்தனையால்
நிம்மதியை இழ்ந்த வண்ணம் எம்மக்கள்.

.

காணவில்லை காணவில்லை என்மகனை என்று
கதறியழும் தாயவளின் கண்ணீரைக்கண்டு
தாளவில்லை பதைபதைத்தேன் கொடுமைகளை எண்ணி
தாய்க்குலத்தை பிழியும் துயர் மறைவதெப்போ மண்ணில்
பாடசாலை சென்றபிள்ளை பிணமாகப் பற்றைக்குள்
பாவிகளின் கொடுமைகளால் பலவுயிர்கள் மூடு கிண்ற்றுக்குள்
வீதிகளில் தடைவிதித்து இடைமறிக்க நடை பயில வேண்டும்
வீணர்களால் பிஞ்சுகளும் வயோதிபமும்கூட மிஞ்சியது இல்லை.
.


செம்மணியில் புகைகிறது என்போன்ற உயிர்கள்
செவிமடுக்க யாருமில்லை வெறிபிடித்த அரச நரிகள்
பிள்ளையின் வளர்ச்சி கண்டு தாயழுதாள் ஏனோ?
பிடித்துதின்னும் அரக்கர்களின் பயம்தானோ
அரசபீடம் ஏறுதற்கு அம்மை போட்ட போடு
அடுத்த நிமிடம் அதை மறந்து பிறதிட்டங்களோடு
செம்மையான அடி உதைகள் கற்பழிப்பு சூடு
செய்திகளை மறைத்து நல்லாட்சி எனும் பகட்டு.
.

இரவுவேளை தலைகாட்ட முடியாது வெளியில்
இளையவர்கள் வாழும் வீட்டில் எழுப்பிவிட்டு நிரலில்
பரவி நின்று பேசுவார்கள் தம்மொழியில்
பகலாகுமுன்பே கைது தெரியாது வெளியில்
துரவுகள் கிணறுகள் மண்ணைத்தூர்க்கும்
துருவி ஆராய யார் வருவார் இங்கு
தீர்வுப்பொதியில் இன்னுமென்ன திட்டங்களோ
தீராத எம் சுமையை எடுத்து வைப்பது எப்பொதியில்?

.

பலத்த அழிவுகள் இரத்த சிதறல்கள் பொறுக்க முடியாமல்
பதைத்து எழுந்த வேங்கைகள் பலபேர் - தம்
இனத்தை அழிக்கும் கொடுமைகள் மறைய
இளமை வாழ்வை களைந்து எறிந்து
உதைக்கும் எதிரியை சிதைப்பேன் என்று
உரமோடு நிமிர்ந்த தலைவன் செல்வங்கள்
விடியலை நோக்கி போரிடும் படையை
விட்டுவிலகி நானும் சுநலமாய் வாழலாமோ?
.

விழித்துப்பார்த்தேன் உணர்ச்சிவசத்தில்
விலகிப்போனது இரவின் கனவு
வேலைக்குப்போகவேண்டும் சொன்னது என் மனது
வேறாகிப்போனதுவோ என் மண்ணின் கனவு
இல்லை.. இல்லை ...வேராகிப்போனது நினைவு
இயந்திர வாழ்க்கைக்கு நடைபயின்றேன்
திசைமாறிப்போகுமோ எந்தன் மோகம்
தினம் மோதுதே தேசத்தின் ராகம்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...