எழில் கொஞ்சும் இயற்கை வளம்
எனை ஈன்றெடுத்த அன்னை நிலம்
விழி காண முடியவில்லை இன்று
விதியை எண்ணி வருந்துகிறேன் நொந்து
பழி வந்து சேர்ந்ததுவோ எனக்கு
பகட்டாக வாழப்பறந்தவன் என்று
களிப்போடு வாழ்வில்லை நான் இங்கு
கனன்று எரிகிறது என் நெஞ்சு
.
பரந்த வானின் நிலவின் ஒளியில்
படுக்க வேண்டும் பாய்விரித்து மரநிழலில்
விடிந்ததென்று சேவல் கூவும் இன்பம்
வித விதமாய் ஒலியெழுப்பும் அலாரமிது துன்பம்
செறிந்த மரங்களூடே வீசும் காற்றை
செத்து மடியுமுன் ஏற்க வேண்டும் என் சுவாசப்பை
விரிந்து செல்கிறது மண்ணில் கால்பதிக்கும் ஆசை
விம்மி அழுகிறேன் கேட்கவில்லை ஓசை
.
பலநாள் ஆசைகள் சுடராய் எரிந்தது
பலனாய் நெடுங்கனவுதான் வந்தது
இதுநாள்வரையில் உறங்கிய ஆசைகள்
இதமாய் நெஞ்சில் உதயம் ஆனது
தலைநகரில் கால்பதித்தேன் புல்லரித்தது உடல்
தமிழ் முகங்களைத்தேடினேன் உடன்
தொலைவில் ஓரிருவர் சிரிப்பைத்தொலைத்த முகம்
தொக்கி நின்றது அதில் பெரும் பயம்.
.
சிறைவாழ் தமிழ்ர்கள் பலபேர் - இங்கு
சிறுகுற்றம் புரியவில்லை விடுதலைதான் என்று?
மறைந்து வாழ்ந்தனர் நம்மக்கள்- இம்
மண்ணில் தமிழ்ராய் பிறந்ததுதான் அவர் குற்றம்
கொலை மலிந்து உயிர்கள் தொலைந்தது
கொடுமையது தலை விரித்து தாண்டவம் ஆடியது
தடை உத்தரவு திடீரெனப் பிறந்தது
தடல்புடல் தேடலோடு கைதுகள் தொடர்ந்தது.
.
சோதனைகள் பலகடந்து நான் சென்றேன் யாழிற்கு
சோலையாக இருந்தமண் கிடந்ததே பாழாக
உறவுகள் கண்டேன் இதுவென்ன உருவோ
உடல்மெலிவு சகிக்கவில்லை ஊனிழந்த நிலையோ
சித்திமகள் சித்திரவதையில் வாழ்விழந்ததேனோ
சிறகொடிந்த பறவைகளாய் வாழுவோர் எத்தனையோ?
நித்தம் இங்கு நடக்கும் நிந்தனையால்
நிம்மதியை இழ்ந்த வண்ணம் எம்மக்கள்.
.
காணவில்லை காணவில்லை என்மகனை என்று
கதறியழும் தாயவளின் கண்ணீரைக்கண்டு
தாளவில்லை பதைபதைத்தேன் கொடுமைகளை எண்ணி
தாய்க்குலத்தை பிழியும் துயர் மறைவதெப்போ மண்ணில்
பாடசாலை சென்றபிள்ளை பிணமாகப் பற்றைக்குள்
பாவிகளின் கொடுமைகளால் பலவுயிர்கள் மூடு கிண்ற்றுக்குள்
வீதிகளில் தடைவிதித்து இடைமறிக்க நடை பயில வேண்டும்
வீணர்களால் பிஞ்சுகளும் வயோதிபமும்கூட மிஞ்சியது இல்லை.
.
செம்மணியில் புகைகிறது என்போன்ற உயிர்கள்
செவிமடுக்க யாருமில்லை வெறிபிடித்த அரச நரிகள்
பிள்ளையின் வளர்ச்சி கண்டு தாயழுதாள் ஏனோ?
பிடித்துதின்னும் அரக்கர்களின் பயம்தானோ
அரசபீடம் ஏறுதற்கு அம்மை போட்ட போடு
அடுத்த நிமிடம் அதை மறந்து பிறதிட்டங்களோடு
செம்மையான அடி உதைகள் கற்பழிப்பு சூடு
செய்திகளை மறைத்து நல்லாட்சி எனும் பகட்டு.
.
இரவுவேளை தலைகாட்ட முடியாது வெளியில்
இளையவர்கள் வாழும் வீட்டில் எழுப்பிவிட்டு நிரலில்
பரவி நின்று பேசுவார்கள் தம்மொழியில்
பகலாகுமுன்பே கைது தெரியாது வெளியில்
துரவுகள் கிணறுகள் மண்ணைத்தூர்க்கும்
துருவி ஆராய யார் வருவார் இங்கு
தீர்வுப்பொதியில் இன்னுமென்ன திட்டங்களோ
தீராத எம் சுமையை எடுத்து வைப்பது எப்பொதியில்?
.
பலத்த அழிவுகள் இரத்த சிதறல்கள் பொறுக்க முடியாமல்
பதைத்து எழுந்த வேங்கைகள் பலபேர் - தம்
இனத்தை அழிக்கும் கொடுமைகள் மறைய
இளமை வாழ்வை களைந்து எறிந்து
உதைக்கும் எதிரியை சிதைப்பேன் என்று
உரமோடு நிமிர்ந்த தலைவன் செல்வங்கள்
விடியலை நோக்கி போரிடும் படையை
விட்டுவிலகி நானும் சுநலமாய் வாழலாமோ?
.
விழித்துப்பார்த்தேன் உணர்ச்சிவசத்தில்
விலகிப்போனது இரவின் கனவு
வேலைக்குப்போகவேண்டும் சொன்னது என் மனது
வேறாகிப்போனதுவோ என் மண்ணின் கனவு
இல்லை.. இல்லை ...வேராகிப்போனது நினைவு
இயந்திர வாழ்க்கைக்கு நடைபயின்றேன்
திசைமாறிப்போகுமோ எந்தன் மோகம்
தினம் மோதுதே தேசத்தின் ராகம்.
No comments:
Post a Comment