Monday 23 January 2017

சந்திரிகா அம்மைக்கு

1998

எண்ணி எண்ணி எத்தனையோ நாட்களாக
எனக்குள்ளே புதைந்தபடி செல்லாத ஆசையொன்று
எழுதிட வேண்டும் உனக்கொரு கடிதமதில்
என்னின மக்களின் மனக்குமுறல்களை

நலமென்று நாம் கூற முடியுமா - எம்
நிலையின்று நீ உணர்ந்திடக்கூடுமா?
நினைத்துப்பார் மனித உணர்வுகளுடன் ஒருகணம்
நித்தமும் நிகழ்த்தும் பலிகளையும் அதன் வலிகளையும்

அன்றொருநாள் என் கண்முன்னே கொன்றார்கள்
அன்னையொடு தந்தையையும் எனக்கண்ணீருடன் கூறிடும்
ஆதரவின்றிய குழந்தைகள் எண்ணிக்கை தொடர்கதையிங்கு - உன்
அடக்குமுறைகளுக்கு பிஞ்சுக்குழந்தைகளுமா அழுது துடிக்க வேண்டும்?

துடிப்புடனே பள்ளி சென்று கனவுடனே படித்துவரும்
துள்ளும் இளவயது பிள்ளைகளின் வாழ்வினிலே
துன்பங்கள் பல இழைத்து சோர்ந்திடச்செய்து-எதற்கு
எதற்கு துருப்பிடிக்க வைக்கிறாய் இவர்கள் எதிர்காலத்தை?

அலைபாயும் கடலில் தமிழன் அடிபதிக்க தடையெதற்கு
அனுமதியில்லையா எம் நிலமதில் குடியிருக்கவும் பயிர்விதைக்கவும்
அநியாய முறையில் எங்கள் உரிமைகள் பறிப்பு
அரசாள்பவர்களே என்று தணியும் எம்மீது உங்கள் கொதிப்பு

எங்கள் பத்திரிகையின் பக்கங்களும் செய்திகளும் இயம்புவது
எங்கெல்லாம் குண்டுவீழ்ந்து எத்தனைபேர் இன்றுபலி
எங்கெங்கு பெண்கள் கிருஷாந்தி ஆனார்கள் என்பவைதான்
என்றிதற்கு முற்றுப்புள்ளி தெரியவில்லை இது எமக்கு

நாட்டை வளம்படுத்த என்று நீ நாடகமிட்டு
நாடு நாடாய் பணம் வேண்டி போடுகிறாய் எம்மில் குண்டு
நம் நாட்டிலேயே அகதியாகி நிலமிழந்து நிலைகுலைந்து
நாளாந்தம் பயத்தோடு பதைப்புடனே வாழுமெமக்கு வழி ஏது?

உலக நாடுகளும் ஊமையாகி போனதால்
உன் பிழைகள் இன்று நியாயம் ஆனதா?
உயிர் பிழைக்க மருந்தில்லை உறங்குகிறது உண்மை
உந்தன் ஆட்சியில் படும்துயர் முடியுமா எழுதி

ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டினால்
ஒவ்வொரு சோகம் குடிகொண்டு இருக்க
ஒன்றும் தெரியாத பாவைபோல் அலரி மாளிகையில் நீ
ஒருமுறையேனும் நிதானித்து இதையிட்டு யோசி

தெரியாத மொழியில் ஆட்சி நடத்தி
திணறடிக்கிறாய் மூச்சு எம்தமிழ் மொழிதனை
தயவுடன் ஒருமுறை தட்டிப்பாருன் மனச்சாட்சியை
தமிழ்த்தலைமுறை ஒருமுறையும் இல்லை உனக்கடிமை

விரைவில் ஒருமுறை வடபகுதிக்கு வருகை தா
வரும்போது மறக்காமல் உன் மகனையும் கூட்டிவா
வியக்காதே எதுக்கென்று செம்மணிக்குள் புதைக்க
விளங்கும் அதன்பின்பு உனக்கந்த வேதனை

எம் இனிய தாசம் ஒருமுறை அமைதியில் சிரிக்க
எம் மனம் எவ்வளவோ ஆசைப்படுகிறது -நீ
ஏவிவிட்டு உன் படைகளை சேதமாக்கியே பார்க்கிறாய் -ஆனால்
எரியும் மனதுடன் உலவுகிறது வேங்கைக்கூட்டம் கவனம்

பயங்கரச்செய்திகள் அபாயக்குரல்கள்
பாலாத்காரம் சாட்சிகள் இல்லாத சாவுகள்
பாதை தெரியாத வாழ்க்கை ஓட்டம் இங்கு
பாவிகளின் வெறியாட்டமோ தாங்கமுடியவில்லை

உன்படைகளின்று மோதுகிறது பச்சிளம்குழந்தைகளுடன்
உண்மையில் வீழ்த்தப்படுவது அப்பாவி மக்கள்
உனக்கெதுக்கிந்த ஆணவம் வென்றுகொண்டிருக்கிறாய் என்றா?
உதிர்கின்ற பூக்களாகி மக்களுக்காக உன் எதிரியாகினர் புலிகள்

வருகின்ற காலமதில் நீ பாடம் படிப்பாய்
விரிகின்ற போரில் நீயதை உணரும் நேரம் அருகில்
விளங்கத்தான் போகிறது உனக்கப்போது
விடுதலை என்பதற்கு விலை என்ன என்று

இத்துடன் நான் முடிக்குமுன்னர்
இடிக்கப்பட்ட கோயிலின் கையுடைந்த கடவுளை
இரக்கத்துடன் வேண்டிக்கொள்வது என்னவெனில்
இக்கடிதம் அனுப்புவதற்கு குன்றுகுழி வீதியினில்

தங்கு தடை தாண்டிநான் போகும் போது
திரும்பி உயிருடன் வரவேண்டும் என மிகுந்த சிரமத்துடன்
திருந்தாத உனக்கு அனுப்புகிறேன் கடிதம்
தயவு செய்து புரிந்து கொள்வாயா?

கண்டிப்பாய் நீயதனைக்கண்டு கொள்ள மாட்டாய்
குப்பையிலே போகுமென்று நிச்சயமாய் தெரியும்
கேலியாகிப்போனதல்ல இக்கடிதம்
கடிதமாகி போனதுதான் எம் வாழ்க்கை
சுரேன் செல்லையா [சுரேஜினிபாலகுமாரன்]

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...