உறவுகளுக்குள் ஒன்றுகூடல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.திருமண விழா,சடங்கு,பிறந்தநாள்,நன்மை தீமைகள் என்று ஒன்று கூடுவது வழக்கம்.
இவ்வாறான ஒன்றுகூடலில் நன்மை சந்தோசம் என்பன எவ்வளவு அமைகிறதோ அதற்கு சமனான சச்சரவுகள் மனக்குறைகள் என்பனவும் தவிர்க்க முடியாத ஒன்று.
இவற்றை முடிந்தவரை நேர்த்தி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்.
விழாவுக்கு உரியவர்களாக இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ,விழாவில் பங்கு பெறுபவராக இருக்கும் பட்சத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்குவோம்.
*விழா அமைப்பாளர்களாக இருக்கும் பட்சத்தில்
*முதலில் விழா பற்றி திட்டமிடல் வேண்டும்.
*முற்பகையை மறந்து அழைப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
*பங்கு பெற முடியாத உறவுகளின் காரணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
*அனுசரிப்பில் வேற்றுமை காட்ட கூடாது.
*தரமான சுவையான உணவுகளால் விருந்தளிக்க வேண்டும்.
*குடும்ப விழாக்களில் முடிந்தளவு பேச்சைக்குறைப்பது நன்று .மேள நாயன இசைகளை திருமண நிகழ்ச்சிகளில் முன்னோர்கள் புகுத்தியதற்கான காரணம் இதுதான்.
உறவுகள் கூடுமிடத்தில் ஒருவர் பேச்சு இன்னொருவர் காதுக்கு எட்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மணமக்களை ஒரு சேர பார்த்தவுடன் சொந்தங்கள் அவர்கள் குறை நிறைகளை பேச
அவை அவர்களின் அன்றைய நாளின் மகத்துவத்தை சீர்குலைத்து விடாமல் இருக்கவுமே.
இதற்கமைய பொது நிகழ்ச்சிகளை அதாவது எல்லோரும் சேர்ந்து ரசிக்ககூடிய ஆடல், பாடல் ,வாத்தியங்கள்,போட்டிகள், போன்றவற்றை ஒழுங்கு செய்யலாம்.
*வருகை தந்த யாரையுமே ஒரு தடவையாவது பார்த்து பேசி கைகுலுக்கி நலம் விசாரிக்க 1 நிமிடத்தை செலவிட தயங்கக்கூடாது.
*நம் விழாவிற்கு வருவோர் தங்களது முழுநாளை அல்லது சில மணித்தியாலங்களை நமக்காக செலவிடுகிறார்கள் அவர்கள் நம்முடன் செலவிடும் அந்த நாள் நேரங்களுக்கு
நாம் பொறுப்பாளியாக இருந்து அவர்களை உபசரித்து அனுப்பி வைக்க வேண்டும்.
*சிலர் செய்யும் சேட்டைகளை பொறுத்து பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.
*விழாவில் உள்ள குறை குற்றங்களுக்கு செவிமடுத்து திருத்திக்கொள்ள முயல வேண்டும்.
அடுத்து நாம் விழாவில் பங்கு பெறுபவராக இருந்தால்
*அழைப்பு, விழா நேரம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
*விழா அமைத்துள்ள குடும்பத்துக்கு சிரமத்தை கொடுக்காத வகையில் நம்முடைய பங்களிப்பு அமைய வேண்டும்.சிலர் விழா நடத்தும் குடும்பத்தினர் வீட்டுக்கு சில நாட்களின் முன்பாகவே சென்று
ஊரைச்சுற்றி பார்க்க கிளம்பிவிடுவார்கள்.இது அவர்கள் உங்களில் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் அந்த நேர வேலைப்பழுக்களில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.
ஆகவே முடிந்தளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
*உணவுப்பழக்கவழக்கங்களை விழாவில் மாற்றிக்கொண்டு அவர்கள் உணவிற்கு ஏற்றால்போல் சமாளிக்க வேண்டும்.சிலர் விழாவில் சாப்பாடு சரியில்லை என்று அடம்பிடிப்பார்கள்.
விழாக்குடும்பத்தார்களுக்கே அதை போய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.எந்த விழா ஏற்பாட்டாளர்களும் வேண்டுமென்றே தரமற்ற சுவையற்ற உணவுகளை அவர்கள் விழாவில் பரிமாற முனைய மாட்டார்கள்.
இருப்பினும் சந்தர்ப்ப வசத்தால் அப்படியும் அமைந்து விடுவதுண்டு. யாரும் விழாவில் சாப்பிட்ட இந்த உணவினால் ஒரே நாளில் உடல் வளர்ச்சி அடையப்போவதோ உடல் வளர்ச்சி குன்றப்போவதோ இல்லை.
அதனால் அந்த விழாவில் சில விடயங்களை பெரிதுபடுத்தாமல் மகிழ்ச்சியாக பங்களித்து விட்டு வரலாம்.
*பேச்சை அளவு படுத்த வேண்டும்.எல்லா உறவுகளும் கூடியுள்ள இடத்தில் நக்கல் விஷமப்பேச்சுகள் போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது.
*உறவினர்களிடத்தில் எல்லோர்முன்னும் வைத்து சில தனிப்பட்ட குடும்ப விடயங்களை நலம் விசாரிக்கிறோம் என்ற பெயரில் கேள்வி தொடுப்பது நல்லதல்ல.
*விழாவில் முடிந்தளவு நல்ல விடயங்கள் பொதுவிடயங்கள் போன்றவற்றை பேசுவதும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் புன்னகையுடன் சந்தோசமாக கூடிக்குலவி சிரித்து மகிழ்ந்து அந்த இடத்தை நிரப்புவதுமே நமக்கு சிறப்பைதரும்.
*தேவைக்கதிகமாக உரிமை எடுத்து எதையாவது செய்து நம் மதிப்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது.நமது வரையறை தெரிந்து செயல்பட வேண்டும்.
*குற்றம் குறைகளையே பேசுவதும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் நம்மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி நம்மைபார்த்தாலே அருவருப்பு ஏற்படுவதை தவிர்க்க நம்மால் முடிந்தளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
*நம்முடைய பங்களிப்பால் விழாவாளர்கள் எந்த தீமையும் இடையூறுகளையும் எதிர் கொள்ளாமல் இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.
*உபசரிப்பில் ஏற்படும் தவறுகளை பெரிது படுத்தாமல் அவர்கள் பரபரப்புக்கும் வேலைப்பழுவுக்கும் மதிப்பளித்து மன்னிக்க வேண்டும்.
பூமணி மகள்
No comments:
Post a Comment