Monday 23 January 2017

வரம் அம்மா



அம்மா 
கவலைகள் என்னை முள்
கிளைகளாய் துளைக்கும் போது
உனை கட்டி அழ ஆசைப்படுகிறேன்
நீயில்லை
உயரத்தில் பறந்து நான்
தூரத்தில் வந்தாலும்
துயரத்தில் உன் குரல்
இதயத்துள் இன்னும்
இதமாய் ஒலிக்கிறது
அம்மா
நான் முதல் முதலாக 
உச்சரித்த அதே வார்த்தை
சின்ன வலிக்கும்
வாய்விட்டு
கதறி அழைக்கிறேன்
அருகில் நீ 
இல்லையென்று தெரிந்தும் கூட.......
என்னை பிரிந்தததில்
உனக்கு ஆனந்த வேதனை
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஆனந்தம் விடை பெற்றுவிட்டதம்மா
போலி முகங்கள் பல
நான் கண்டுணர்ந்த போது
கபடமில்லா உன் முகம் - என்னை 
தோழில் சாய அழைக்கிறது
நிர்ப்பந்தங்கள் சிலவற்றால் 
நம் பந்தத்தை நாமே
சிறைக்குள் 
அடைத்துவிட்டோம் அம்மா
நான் கண்ணீர் வடிக்கையில் 
துடைத்த உன்கரம்
இறைவனிடம் எனக்காக தினம்
கூப்புகின்ற உன் கரம்
எனை அள்ளி அணைத்த உன் கரம்
என் அருகில்  இருந்தாலே அது வரம்
இந்த கவி வரையும் நேரத்தில் நான்
அழுது துடைக்கொண்டேன்
அறிவாயா நீ இந்த உண்மை.

வாழாத வாழ்வு




முந்தை நாள்
எஞ்சியதை உண்டு
மிஞ்சிய பணத்தை எண்ணி
எனக்குள் சந்தோஷம்
பலர் கூடிக் களிக்கும்
உறவுகள் வருகை 
வெட்டி செலவென்று
எதையோ சொல்லி ஒதுங்கி
வென்று விட்டதாய் புளாங்கிதம்
எங்கோ மலிவென்று 
யாரோ சொன்னதை கேட்டு
மணிக்கணக்காய்  செலவிட்டு
ஒற்றை ரூபாய்
சேமித்த  பூரிப்பு
காலையில் பசித்த பசிக்கு
மாலையில் வீடு வந்து
சிக்கனாமாய் புசித்ததில் 
ஒரு திருப்தி
அடுத்தவர் செலவைக்கேட்டு
அப்பாடா நமக்கு
அற்றுப்போனது இந்த
மேலதிக செலவு என்று
உள்ளூர ஆனந்தம்
பயணங்களை ஒதுக்கி
மகிழ்வுகளை சுருக்கி
பணத்தை பெருக்கிய
பெருமிதம்
ஆசைப்பட்டதெல்லாம் 
அடக்கியே வைத்து விட்டு
சொத்து சேர்த்த பெருமை
தேவைப்பட்டதையெல்லாம்
கொஞ்சநாள் உபயோகம் அவை
வேண்டாம் வேண்டாம் என்று
எல்லோர் தேவைகளையும்
அடகு வைத்து
வாழ்ந்த வாழ்க்கையில் சேர்த்த சொத்து
இன்று பிள்ளைகள் கையில்
தேவைக்கு அதிகமாய் 
கிடைத்த போது
கட்டுக்கடங்கா உல்லாசம்
ஊதாரி செலவுகள் 
ஒவ்வாத பழக்கங்கள்
நம்மை வருத்தி 
கண்ட பலன்
நம்மை வருத்தும்போது 
வலி தாங்க முடியாமல்
தினம் மாளாமல்
மனம் போல் வாழ்ந்து விடுங்கள்.
வாழக்கற்றுக் கொடுப்பதை விடுத்து
உங்கள் வாழ்வை தத்துக்கொடுத்து 
கெடுத்துவிடாதீர்...

வாழ விடு





மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே 
வாழும்வரை வாழ 
வழிவிடு என்கிறேன் நீயோ 
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.

மெளன விளம்பரம்



வெற்றி மொழி
கற்றுக்கொள்ள 
கடினமாகத்தான் இருக்கிறது
தற்காப்பு ஆயுதம்
தருணத்தில் மறந்து போவதால் - பின்
வருந்தும் வேளைகள் ஆயிரம்
அர்த்தம்
எதை வேண்டினும் சொருகிக்கொள்ள
விட்டுவைக்கும் இடைவெளி
தொகை
எழுதப்படாமல் கையொப்பமிட்ட
காசோலை
மெளனம்
சில நேரம்  வளர்க்கும் பகை
இருப்பினும் நன்மைகள் ஏராளம்
உபயோகி
இது
இலவசம்.

போவதெங்கே என் தேசம்




போர் மேகம் புடை சூழ
யுத்தங்கள் பல கடந்தும்
சிக்கல்கள் குறையவில்லை
இரத்த வெள்ளமொடு
பலத்த அழிவு கண்டும்
நிலத்தில் அமைதியில்லை
சுட்டெரிந்து போகும் போது
எங்கிருந்தோ குரல் கொடுத்தேன்
கெட்டழிந்து போகும்போது 
சுமையோடு சோர்ந்து போனேன்
பட்டபாடு மறந்துபோக 
விட்ட இடம் தொலைத்து நின்றேன்
மரத்துப்போன மனங்களோடு
மறத்தமிழன் வாழ்வுதான் 
பயணிக்கும் திசை மாற்ற
வேண்டும் ஒரு மாற்றம் என்று
மீண்டும் மீண்டும் முயல்வோம்.

எனை நீ பிரிந்தாய்



ஓ....அன்று
அந்த நினைவுகள்தான்
எத்தனை கொடியவை ?
என் மனதைக் கேட்கிறேன் - அது
அழுது துடிக்கிறது
ஐம்புலன்களே நீங்கள்
உறங்கிப் போய்விடுங்கள் என்றேன்
மரண தேவதையே - என்னை
வசூலித்துக்கொள் என்றேன்
இதயச் சுவர்களுக்கு எத்தனை வலிமை
இன்னும் வெடிக்காமல் துடிக்கிறது
துன்பங்களை கைது செய்ய நினைத்து 
பின் சிரிக்கிறேன்
என்னால் கத்தரிக்கவும் முடியவில்லை 
சித்தரிக்கவும் முடியவில்லை
என் பிறந்த நாளை விட - நீ 
எனை பிரிந்த நாள் தான் 
ஆழமாக என்னுள்ளே
வலிப்பதை நீ அறிவாயா????

தென்றல்



அந்த தென்றலின் வரவிற்காய்
அன்றொருநாள் - என் 
இதயக் கதவுகளை
அகலத் திறந்து வைத்தேன்
உறக்கத்தை தொலைத்து 
கற்பனைகளை வாங்கினேன்
பாஷையில்லா மெளனத்தில்
ஆசைகளை வளர்த்தேன்
கனவுகள்கூட கலங்கக் கூடாதென்று
நினைவுகளுக்கு இனிமை கொடுத்தேன்.
திசைமாறி புயலாகி எனை நீங்கி
சென்றது தென்றல்
கற்பனைகளை என்ன செய்வேன்
விற்பனையா செய்ய முடியும்
ஆசைகளை வைத்திருந்து 
பூஜையா புரிவேன்
கனவுக்கும் நினைவுக்கும் 
கடும் தண்டனையா இடுவேன்
வேதனை தணலாகி எரிய
ஊமையாய் மனம் முடங்க
காலம் கட்டளையிடுகிறது
கடந்துபோக வைக்கிறேன்
மறந்து விடு என்று
நானோ தோண்டியே பார்க்கிறேன்
என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது வலிக்க
கனவிலும் வந்து உறுத்தாதே
என்னில் நிலைக்க மறுத்த - உன்
தடங்களை அழிக்கவிடு.

ஏக்கம்






அம்மா என்றழைக்க 
எனக்கில்லை மகவு
என்னை நானே வருத்தி அழிக்கிறேன்
தாயை போற்றும் உலகு
தவிக்கும் நம்மை
தரம்குறைவாய் நோக்குவதுமேனோ
சுற்றங்கள் கூடுகின்ற வேளைகளில்
குற்றம் இழைத்ததுபோல் 
குனிந்து நிற்கின்றேன்
இது பலருக்குத்தெரியாத வலிகள்
என்  வலிகள் கண்ணீர் துளிகளோடு
எனக்கு மட்டுமே சொந்தமாகின்றன.
ஆளுக்கொரு வடிவில் துன்பங்களை
அளந்து கொடுக்கும் இறைவன் நாளை 
ஆளை மாற்றும்போது யாரும் அகப்படலாம்
ஆகவே நம் காயங்களை குத்தி மகிழாதீர்.

மாவீரர்








நாம் உறங்க தாம் விழித்து 
நமைக்காத்து உயிர்நீத்து
தாமுறங்கும் கல்லறையும் 
தகர்த்து எறியப்பட

தமிழர் நம் மனங்களில் குடிவாழும் 
தமிழ்த்தாய் பெற்றெடுத்த 
தன்னிகரில்லா தன்மான சின்னங்கள்

 உற்றவரும் உடன்பிறப்பும்  கண்மூடி தூங்குகையில்
சற்றும் தடையின்றி 
சுற்றிவரும் உங்கள் நினைவலைகள்

பற்றி எரியும் 
பெற்ற மனத்துயர்
மற்றவர்கள் யார் அறிவார்?

குற்றமிங்கு தமிழராக பிறந்ததென்று
குலை நடுங்கி குற்றுயிராய் செத்தொழியும் 
நிலை மாறி  
நீவீர் சிந்திய குருதியும்
விலையற்ற  தியாகமும் ஒருநாள் ஆளும்

எண்ணம்

எண்ணம்

தொலைக்க நினைக்கிறேன்
தூய்மையற்ற நினைவுகளை
மறக்க நினைக்கிறேன்
மனதின் சுமைகளை
என்னுள்
பதிக்க நினைக்கிறேன்
நிறைவேறும் கனவுகளை


நினைவு



இழந்ததை எல்லாம்
இறைவன்
திருப்பி தந்தால்
இன்னுமொரு
புதிய வாழ்வு
பிறரில் சலிக்காமல்
வாழ்ந்து விடுவேன்.




உன்னை எண்ணி



உன்னால் நான்
படுகுழிக்குள்
விழுத்தப்பட்ட பின்னும்
எம்பி எம்பி
உன்னையே எதிர்பார்க்கிறேன்.


இல்லை



சோகத்தின் இறுக்கத்தில் - வந்த
தேகத்தின் சோர்வில் - எழுந்த
சேதத்தின் விளைவில் - எஞ்சிய
என் மதிக்கு செயலில்லை - என்
நின்மதிக்கு பொருளில்லை
தலைவிதிக்கு எழிலில்லை

காதலே



என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது
வலிக்க -என்
கனவிலும் வந்து
உறுத்தாதே.
என்னோடு நிலைக்க
மறுத்த -உன்
தடங்களை அழிக்கவிடு

ஏக்கம்



விரித்த சிறகு
வலிப்பதெதற்கு -என்
தேசமின்று
தூரமாகிப்போனதா?


சந்திரிகா அம்மைக்கு

1998

எண்ணி எண்ணி எத்தனையோ நாட்களாக
எனக்குள்ளே புதைந்தபடி செல்லாத ஆசையொன்று
எழுதிட வேண்டும் உனக்கொரு கடிதமதில்
என்னின மக்களின் மனக்குமுறல்களை

நலமென்று நாம் கூற முடியுமா - எம்
நிலையின்று நீ உணர்ந்திடக்கூடுமா?
நினைத்துப்பார் மனித உணர்வுகளுடன் ஒருகணம்
நித்தமும் நிகழ்த்தும் பலிகளையும் அதன் வலிகளையும்

அன்றொருநாள் என் கண்முன்னே கொன்றார்கள்
அன்னையொடு தந்தையையும் எனக்கண்ணீருடன் கூறிடும்
ஆதரவின்றிய குழந்தைகள் எண்ணிக்கை தொடர்கதையிங்கு - உன்
அடக்குமுறைகளுக்கு பிஞ்சுக்குழந்தைகளுமா அழுது துடிக்க வேண்டும்?

துடிப்புடனே பள்ளி சென்று கனவுடனே படித்துவரும்
துள்ளும் இளவயது பிள்ளைகளின் வாழ்வினிலே
துன்பங்கள் பல இழைத்து சோர்ந்திடச்செய்து-எதற்கு
எதற்கு துருப்பிடிக்க வைக்கிறாய் இவர்கள் எதிர்காலத்தை?

அலைபாயும் கடலில் தமிழன் அடிபதிக்க தடையெதற்கு
அனுமதியில்லையா எம் நிலமதில் குடியிருக்கவும் பயிர்விதைக்கவும்
அநியாய முறையில் எங்கள் உரிமைகள் பறிப்பு
அரசாள்பவர்களே என்று தணியும் எம்மீது உங்கள் கொதிப்பு

எங்கள் பத்திரிகையின் பக்கங்களும் செய்திகளும் இயம்புவது
எங்கெல்லாம் குண்டுவீழ்ந்து எத்தனைபேர் இன்றுபலி
எங்கெங்கு பெண்கள் கிருஷாந்தி ஆனார்கள் என்பவைதான்
என்றிதற்கு முற்றுப்புள்ளி தெரியவில்லை இது எமக்கு

நாட்டை வளம்படுத்த என்று நீ நாடகமிட்டு
நாடு நாடாய் பணம் வேண்டி போடுகிறாய் எம்மில் குண்டு
நம் நாட்டிலேயே அகதியாகி நிலமிழந்து நிலைகுலைந்து
நாளாந்தம் பயத்தோடு பதைப்புடனே வாழுமெமக்கு வழி ஏது?

உலக நாடுகளும் ஊமையாகி போனதால்
உன் பிழைகள் இன்று நியாயம் ஆனதா?
உயிர் பிழைக்க மருந்தில்லை உறங்குகிறது உண்மை
உந்தன் ஆட்சியில் படும்துயர் முடியுமா எழுதி

ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டினால்
ஒவ்வொரு சோகம் குடிகொண்டு இருக்க
ஒன்றும் தெரியாத பாவைபோல் அலரி மாளிகையில் நீ
ஒருமுறையேனும் நிதானித்து இதையிட்டு யோசி

தெரியாத மொழியில் ஆட்சி நடத்தி
திணறடிக்கிறாய் மூச்சு எம்தமிழ் மொழிதனை
தயவுடன் ஒருமுறை தட்டிப்பாருன் மனச்சாட்சியை
தமிழ்த்தலைமுறை ஒருமுறையும் இல்லை உனக்கடிமை

விரைவில் ஒருமுறை வடபகுதிக்கு வருகை தா
வரும்போது மறக்காமல் உன் மகனையும் கூட்டிவா
வியக்காதே எதுக்கென்று செம்மணிக்குள் புதைக்க
விளங்கும் அதன்பின்பு உனக்கந்த வேதனை

எம் இனிய தாசம் ஒருமுறை அமைதியில் சிரிக்க
எம் மனம் எவ்வளவோ ஆசைப்படுகிறது -நீ
ஏவிவிட்டு உன் படைகளை சேதமாக்கியே பார்க்கிறாய் -ஆனால்
எரியும் மனதுடன் உலவுகிறது வேங்கைக்கூட்டம் கவனம்

பயங்கரச்செய்திகள் அபாயக்குரல்கள்
பாலாத்காரம் சாட்சிகள் இல்லாத சாவுகள்
பாதை தெரியாத வாழ்க்கை ஓட்டம் இங்கு
பாவிகளின் வெறியாட்டமோ தாங்கமுடியவில்லை

உன்படைகளின்று மோதுகிறது பச்சிளம்குழந்தைகளுடன்
உண்மையில் வீழ்த்தப்படுவது அப்பாவி மக்கள்
உனக்கெதுக்கிந்த ஆணவம் வென்றுகொண்டிருக்கிறாய் என்றா?
உதிர்கின்ற பூக்களாகி மக்களுக்காக உன் எதிரியாகினர் புலிகள்

வருகின்ற காலமதில் நீ பாடம் படிப்பாய்
விரிகின்ற போரில் நீயதை உணரும் நேரம் அருகில்
விளங்கத்தான் போகிறது உனக்கப்போது
விடுதலை என்பதற்கு விலை என்ன என்று

இத்துடன் நான் முடிக்குமுன்னர்
இடிக்கப்பட்ட கோயிலின் கையுடைந்த கடவுளை
இரக்கத்துடன் வேண்டிக்கொள்வது என்னவெனில்
இக்கடிதம் அனுப்புவதற்கு குன்றுகுழி வீதியினில்

தங்கு தடை தாண்டிநான் போகும் போது
திரும்பி உயிருடன் வரவேண்டும் என மிகுந்த சிரமத்துடன்
திருந்தாத உனக்கு அனுப்புகிறேன் கடிதம்
தயவு செய்து புரிந்து கொள்வாயா?

கண்டிப்பாய் நீயதனைக்கண்டு கொள்ள மாட்டாய்
குப்பையிலே போகுமென்று நிச்சயமாய் தெரியும்
கேலியாகிப்போனதல்ல இக்கடிதம்
கடிதமாகி போனதுதான் எம் வாழ்க்கை
சுரேன் செல்லையா [சுரேஜினிபாலகுமாரன்]

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...