Thursday, 2 February 2017

என்னால் நான் ........


வருடங்கள் உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது
வழக்கம் போலவே என்னிடம் ஒரு கேள்வி - நான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா??
ஆம்
சுவாசிப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி
சுவாரஸ்யமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
ஆம்
வருந்தி உழைத்து வந்த 
வருமானத்தின் பெரும்பகுதியை 
சேமிப்பில் புதைக்க எண்ணி - வரும் 
நாளைய சந்தோசங்களுக்காக
என்னை 
 மேலும் வருத்தி வருத்தி 
இன்றைய வாழ்வை தொலைக்கவில்லை
ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அடுத்தவரின் உடலுழைப்பில் குளிர்காயும் எண்ணம் இல்லை
யாரையும் இடையூறு பண்ணவும் நேரமில்லை
ஒப்பிட்டு பார்த்து போட்டிகள் போட்டதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இருப்பினும் வாழ்க்கை ஓட்டத்தில் 
நான் வெறுக்கவும் படுகிறேன் சிலரை
வெறுக்கவும் செய்கிறேன்
என் வார்த்தைகள் என்னை மீறுகின்றதையும்
தவறுகள் என்வழி தாண்டவம் கொள்வதையும் 
என்னால் உணர்ந்து திருத்திக்கொள்ள முடிகிறது
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என் அன்புக்கு தகுதியானவர்கள் 
எத்தொலைவில் இருப்பினும் தினமும் என் 
மனக்கண்ணில் நிழலாடி
உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
என் நேசத்திற்கு உரியவர்களுக்கு நான் பாசாங்கு காட்டியதில்லை
என் பாசத்தையும் நேரத்தையும் 
அர்ப்பணிக்க தயங்கியதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பனியில் உணவின்றி ஆங்காங்கே ஒளித்திருக்கும் 
சின்ன குருவிகள் பற்றி என் நாளாந்த சிந்தனையில் இடம் இருந்தாலும்
சில எதிர்மறை எண்ணம்கொண்ட
மனிதர்கள் குணம் கண்டு 
பயத்துடன் ஒதுங்கவே செய்கிறேன்
என் மகிழ்ச்சித் தருணங்களை அவை
மென்று விழுங்கி விட கூடாது என்பதற்காக....
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்வின் இறுக்கமான சூழல்களையும்
போராட்டங்களையும் வென்று வெளியேறவும் 
சத்தமின்றி என் கவலைகளுக்கு தாழ் போடவும் 
யாருக்கும் அச்சம் இன்றி என் வழி செல்லவும் 
இஷ்டமுடன் பழகிக்கொண்டதால் நான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
பிறரை தனிப்பட்ட கேள்விகளால் குடைந்து 
விபரம் அறிவதில் ஆர்வமில்லை
வீண்பழி சொல்லவும் விளைந்ததில்லை
அடுத்தவர் பற்றிய வேண்டாத பேச்சுக்கு
என் விலையற்ற நிமிடங்களை 
செலவிட்டு மகிழ்ந்ததில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
என் ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவுகளையும்
ஆர்வமுடன் மகிழ்ச்சியாக்கி கடந்து செல்லும்படி 
மாற்றி அமைக்கிறேன்
ஆம் இதே போலவே வாழ்ந்து மறைய விளைகிறேன்
நிகழ்கால மகிழ்ச்சியை அடியோடு அடகு வைக்கும்
எதிர்கால சாதனை எனக்கு வேண்டாம் எனும்
சாதாரணமானவளாகவே வாழ்ந்துவிடுகிறேன்
இல்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
என் தாய் என்னை 
டாக்டர் ஆக்கியிருந்தால் மகிழ்வதை விட
என் தந்தை கோடி சொத்துக்களை 
அள்ளி வழங்கியிருந்தால் மகிழ்வதை விட
என்னுள் எதையும் திணிக்காமல் 
போட்டி பொறாமைகளை விதைக்காமல்
மகிழ்வையும் நின்மதியையும் 
உற்பத்தி செய்து 
வாழும் கலை அறியும் அணுகுமுறை 
எனுள் தன்வழியே உறைய வழிவிட்டதனால் 
சாதாரண மனுஷியாய் பெருமையுடன்
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறேன்.
கரையாத சேமிப்பே வாழ்வென்று 
விடியாத விடியலுக்காய் 
களைத்து திளைத்து ஒரு நாள் விழித்து பார்க்கையில் 
எல்லாம் விலகி போனது உணர்ந்து 
நொடிந்து மீதி காலமும் கடந்து
மடிந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆகவே
நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்.
நல்லெண்ணங்களுடனும் 
மிகுந்த புத்துணர்ச்சியுடனும்
எல்லோரும் எல்லாமும் கிடக்கப் பெறவும் 
கிடைத்ததை வைத்து மகிழ்ந்து வாழவும்
வாழ்வின் ஒரு வருடம் குறைந்தாலும் 
கடந்த வருடத்தின் 
பெற்றுக்கொண்ட இன்பங்களை, பாடங்களை 
 மனம் நிறைய எடுத்துக்கொண்டு 
அடுத்த வருடத்தை வாழ்ந்து வளமாக்க அழைக்கிறேன்.
நன்றியுடன் சுரேஜினி பாலகுமாரன்
தங்யூ 2016 அண்ட் வெல்கம் டு 2017 



No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...